அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கையால், அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதன்காரணமாக, உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் இருந்த அதானி, 15ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். அதானியின் சந்தை மதிப்பு குறைந்துவரும் நிலையில், இந்திய அளவிலான பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேநேரத்தில், உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் ஒன்பதாம் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பங்கு வெளியீட்டில் முதலீட்டாளர்களிடம் திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாயை (எஃப்பிஓ) மீண்டும் பங்குதாரர்களுக்கே திருப்பி அளிக்கவுள்ளோம். மோசமான நிலையிலும் பங்குகள் வேண்டி விண்ணப்பித்த பங்குதாரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது. எஃப்.பி.ஓ என்பது ‘ஃபாலோ-ஆன்-பப்ளிக்’ அல்லது இரண்டாம் நிலை சலுகைகள் என்று அழைக்கப்படுகிறது.
அதாவது, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் ஏற்கனவே உள்ள பங்குதாரர்களுக்கும், புதிய முதலீட்டாளர்களுக்கும் புதிய பங்குகளை வழங்கும் செயல்முறையாகும்.
இந்நிலையில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி வெளியிட்ட வீடியோ பதிவில், ‘பங்குச் சந்தையின் வீழ்ச்சி மற்றும் நிலையற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எங்களது நிறுவனம் முதலீட்டாளர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. எனவே எஃப்.பி.ஓ.விடம் இருந்து பெறப்பட்ட பணத்தை திருப்பி அளித்து, அதுதொடர்பான பரிவர்த்தனையை முடிவுக்கு கொண்டு வர உள்ளோம். முதலீட்டாளர்கள் நஷ்டம் அடையக் கூடாது என்பதற்காக, எப்.பி.ஓ.,வை வாபஸ் பெற்றுள்ளோம். இந்த முடிவு தற்போதைக்கு எடுக்கப்பட்டதுதான். எதிர்கால திட்டங்களில் இந்த முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என்று கூறியுள்ளார்.
0 Comments