ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘ஆர்ஆர்ஆர்’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், மார்ச் 25-ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இந்தப் படம் தற்போது கோல்டன் குளோப் விருது வென்றுள்ளது.
திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. Hollywood Foreign Press Association சார்பில் நடக்கும் இந்த விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றுவருகிறது.
இந்த விருதுக்கு ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்தியவாடி, ரிஷப் ஷெட்டியின் காந்தாரா, செல்லோ ஷோ ஆகியப் படங்கள் விருதுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ படம் மட்டுமே நாமினேஷனில் இடம்பிடித்திருந்தது. ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவிலும், நாட்டு நாட்டு பாடல், சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வாகி இருந்த நிலையில், தற்போது நாட்டு நாட்டு பாடல், சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது வென்று அசத்தியுள்ளது.
ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் என ஒட்டுமொத்த படக்குழுவும் விழாவில் பங்கேற்றிருந்த நிலையில் விருது அறிவிக்கப்பட்டதும் அனைவரும் கத்தி ஆர்ப்பரித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி விருதை பெற்றுக்கொண்டார்.
ஏற்கனவே, ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஏஆர் ரஹ்மான் கோல்டன் குளோப் விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments