வங்கக் கடலில் தெற்கு பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு பகுதிக்கு நகர்ந்து வந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்பதால் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்:
வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. அதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று மேலும் வலுவடைந்து தென்மேற்கு பகுதியில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோரப் நேற்று மழை பெய்தது.
இந்நிலையில், அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக் கடல் பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு இன்று அல்லது நாளை நடக்கும் என்பதால் தமிழக கடலோரப் பகுதியில் பலத்த மழை பெய்யும்.
குறிப்பாக தென் தமிழகத்தை சேர்ந்த மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும். இதுதவிர, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மற்றும் ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதன் காரணமாக தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய மேற்கு இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments