உயர்சாதி பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ் (பாமக, நிறுவனர்):
ஒன்றிய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103வது திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இட ஒதுக்கீட்டின் நோக்கம் சமூகநிலை முன்னேற்றம் தான். ஆனால் இந்த தீர்ப்பு சமூக நீதியின் அடிப்படை தத்துவத்தை தாக்கி, தகர்த்து எறிந்திருக்கிறது. எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படாமல் உயர்வகுப்பு ஏழைகளுக்கு எந்த அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை.
கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்):
பொருளாதார அடிப்படையில் அவை செல்லாது என்ற மண்டல் குழு தொடர்பான 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலிருந்து தப்பிக்கவே 103வது அரசமைப்பு சட்டத்திருத்தமே அடிக்கட்டுமானத்திற்கு விரோதமானதாகும். இதன் மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டியது அவசியம், அவசரம்.
வைகோ (மதிமுக, பொதுச்செயலாளர்):
உயர்சாதி ஏழைகளுக்கு அளிக்கப்படும் 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். சமூக நீதிக்காகப் போராடும் ஜனநாயக சக்திகள் ஒன்றுசேர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அன்புமணி (பாமக, தலைவர்):
காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த பட்டியலின, பழங்குடியின, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூகநீதி இந்த தீர்ப்பால் பாதிக்கப்படும் நிலையில், அதை போக்குவதற்காக நடவடிக்கைகள் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
முத்தரசன் (சிபிஎம், மாநில செயலாளர்):
பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டின் தீர்ப்பு என்பது சரியல்ல.
திருமாவளவன் (விசிக, தலைவர்):
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான தீர்ப்பாகும். உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகளைப் புரிந்து கொண்டு பாஜ அரசும் அவசர அவசரமாக எல்லா துறைகளிலும் 10% இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை அனுப்ப வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வழக்கில் மனு தாக்கல் செய்த திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தனி நபர்களும் இத்தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வர் என நம்புகிறோம்.
டிடிவி.தினகரன் (அமமுக, பொதுச்செயலாளர்):
பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம், வழங்கியிருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் மேம்பாட்டிற்கு அரசு உதவிட வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்காக சமூகநீதியின் அடிப்படையையே சீர்குலைப்பது போல நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா பின்தங்கிய சமூகங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ்
இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தபோது, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக முதல் முயற்சி எடுக்கப்பட்டது.
இதற்காக, சின்ஹோ கமிஷனை அமைத்தார், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங். கடந்த, 2005ல் துவங்கிய இந்த கமிஷனின் விசாரணை முடிந்து, 2010ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது விரிவாக விவாதிக்கப்பட்டு, 2014ல் பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.ஆனால், அது சட்டமாக்க பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு ஐந்து ஆண்டு எடுத்துக் கொண்டது. காங்கிரஸ் முயற்சியில் இந்த இடஒதுக்கீடு உருவானதால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
பிராமணர் சங்கம் வரவேற்பு
தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவர் என்.நாராயணன் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு சட்டப்பூர்வமாக அமல்படுத்தி நடைமுறைப்படுத்தி வரும் முற்பட்டோரில் நலிந்தோருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீடை உறுதி செய்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை சங்கம் வரவேற்கிறது.இந்த வழக்கில் தமிழக அரசு தாங்களே முன்வந்து பங்கு கொண்டதால், இந்த தீர்ப்பை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டப்பூர்வ கடமை தமிழக அரசுக்கு உள்ளது.
இந்த சட்டப்பூர்வமான, 10 சதவீத இட ஒதுக்கீடை கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்த முன்வராத அ.தி.மு.க.,வும், தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க.,வும் தங்களது இட ஒதுக்கீடு கொள்கையை சரிசெய்து கொள்ள, சமன் செய்து கொள்ள இந்த தீர்ப்பு ஒரு நல்வாய்ப்பாகும்.
தமிழக முற்பட்டோர் பட்டியலில் உள்ள, 76 தமிழக ஜாதிகள் பயன்பெறக்கூடிய இந்த 10 சதவீத இட ஒதுக்கீடை தமிழகத்திலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments