சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்னை பெருநகரில் பேருந்துகளின் மேற்கூரையில் ஏறுவதும், படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்வதும், பயணிகளுக்குத் தொந்தரவு கொடுக்கும் வகையில் பேருந்துக்கு உள்ளேயே ஆட்டம் போடுவதும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து போலீஸார், சென்னை பெருநகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆனாலும், மாணவர்கள் பேருந்துகளில் எல்லை மீறுவது தொடர்ந்து வருகிறது. மாணவர்களின் அத்துமீறல்களைப் பொதுமக்கள் வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்து தினமும் காவல் துறைக்கு அனுப்பி வருகின்றனர். இதை போலீஸார் சேகரித்து வைத்து தற்போது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக பொதுமக்கள்அனுப்பிய வீடியோ, புகைப்படங்கள் மற்றும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகள் மூலம் எல்லை மீறிய மாணவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "பள்ளி - கல்லூரி மாணவர்களில் பலர் கல்வி நிலையங்களுக்கு செல்லும் நேரம் மற்றும் வீடு திரும்பும் நேரங்களில் பேருந்துகளில் எல்லை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில மாணவர்கள் பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் தகராறிலும் ஈடுபடுகின்றனர்.
இதில், தொடர்புடைய மாணவர்களை எச்சரித்து விடுவித்துள்ளோம். ஆனாலும் சிலர் கேட்காமல் தொடர்ந்து எல்லை மீறி வருகின்றனர். எனவே, இனி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்" என்றனர்.
0 Comments