Ad Code

Responsive Advertisement

ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் - அமைச்சர் அறிவிப்பு

 



மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதால் வீடுகளுக்கு தற்போது  வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், ஆதார் எண்ணை இணைக்க நாளை முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 


இதுகுறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 


தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணி ஒன்றிய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகம் எங்கும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.


பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழகத்தில் உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலகங்களிலும் நாளை (28ம் தேதி) திங்கட்கிழமை முதல் 31.12.2022 வரை சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. 


பண்டிகை தினங்கள் தவிர்த்து, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 வரை சிறப்பு முகாம்கள் செயல்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்கள் மூலம் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைத்துக் கொள்ளலாம். 31.12.2022 வரை பொதுமக்கள் அனைவரும் தங்களது மின் கட்டணத்தை எவ்வித சிரமுமின்றி ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி செலுத்தலாம்.


அதற்கு எவ்வித இடையூறும் இல்லை. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்கனவே பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்தும் பொருட்டு மின்நுகர்வோர்களின் தொலைபேசி எண்களை மின் இணைப்புடன் இணைத்துள்ளது. மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதால் வீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. 


அதேபோன்று, கைத்தறி மற்றும் விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியமும் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரமும் தொடர்ந்து வழங்கப்படும். ஆதாரை இணைப்பதால் மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மற்றும் மானியத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement