உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு தமிழகத்தில் செல்லாது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது: அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளவில்லை. சமூக நீதி கொள்கையில் பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு ஒருமித்த கருத்து இருந்தது. சமூக நீதியை அதிகரித்து முதன்முதலில் சட்டம் கொண்டுவந்தவர் கலைஞர். அவரை பின்பற்றி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமூகநீதிக்கான ஒதுக்கப்பட்ட இடத்தை அதிகரித்ததற்கு அவர்களுக்கும் பங்கு உண்டு.
திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் சமூக நீதி கொள்கையை எப்போதும் ஏற்றுக்கொள்ளும் கட்சியாக இருந்து இருக்கின்றன. 2019 இந்த சட்டத்தை மக்களவையில் கொண்டு வருகின்றபோது, அப்போதைய அதிமுக மக்களைவை உறுப்பினராக இருந்த தம்பிதுரை எதிர்த்து பேசி வெளிநடப்பு செய்தார். அதேபோல் நவநீதிகிருஷ்ணன் எதிர்த்து பேசி வெளிநடப்பு செய்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் சமூக நீதியை பின்பற்றிய அதிமுகதான் தற்போது இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதற்கு காரணம் அதிமுகவின் உட்கட்சி பிரச்னையா அல்லது கொள்கையிலேயே பாஜவோடு செல்ல வேண்டிய எண்ணமா என்பது தெரியவில்லை.
2019ம் ஆண்டு பத்து நாட்களில் அவசர அவசரமாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, உடனடியாக குடியரசு தலைவர் கையெழுத்தை பெற்றுவிட்டனர். இந்த அளவிற்கு தீவிரமாக இருப்பதற்கு காரணம் சமூக நீதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு மீது நம்பிக்கையில்லை. அந்த அடிப்படையில் தான் இந்த தீர்ப்பை எதிர்க்கிறோம். ஒருமாதத்திற்கு ரூ.66 ஆயிரம் வாங்குபவர்கள் ஏழையா, ஒரு நாளைக்கு ரூ.2200 வாங்குகின்றவர் ஏழையா. பாஜ பெரும் முதலாளிக்கு ஆதரவாக இருப்பவர்கள். எனவே, தான் இந்த இடஒதுக்கீட்டை முழுமையாக எதிர்க்கிறோம். தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய சட்டரீதியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், அனைத்து கட்சிகளின் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
மேலும், தமிழகத்தை பொறுத்தவரை 10% இடஒதுக்கீடு செல்லாது. ஏனெனில் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மத்திய கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இந்த இடஒதுக்கீடு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. மாநில அரசு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அந்தந்த மாநிலங்களிலேயே அது குறித்து முடிவு எடுத்துக்கொள்ளலாம். அதன்படி, தமிழகத்தில் சமூக நீதியின் அடிப்படையில் 69% பின்பற்றப்படும். பொருளாதார பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லாது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments