வழுக்கைக்கான சிகிச்சை முறைகள் அது ஏற்படுவதற்கான காரணம் மற்றும் நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது
எந்த வயதாக இருந்தாலும் சரி, ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவது அவர்களது மன உளைச்சல், சுயமரியாதை, தன்னம்பிக்கை ஆகிய விஷயங்களை பாதிக்கிறது. முடி உதிர்வு பிரச்சனைக்கு மரபியல் முதல் ஊட்டச்சத்து குறைபாடுகள் வரை பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா எனப்படும் மரபணு பிரச்சனை பரம்பரை, பரம்பரையாக ஆண்களுக்கு வழுக்கை ஏற்பட காரணமாக அமைகிறது.
இதனால் உலகில் உள்ள ஆண்களில் 70 சதவீதம் பேர் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 20 அல்லது 25 வயதிலேயே ஆண்களுக்கு வழுக்கை விழக்கூடும் என்றும், 50 வயதிற்குள் ஆண்கள் தலையில் உள்ள பாதி அளவு முடியை இழக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்களுக்கு வழுக்கை விழ மரபணு ரீதியிலான காரணம் முதன்மையானது என்றால், ஆணின் பாலியல் உணர்வை தூண்டக்கூடிய டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதும் மயிர் கால்களை பாதிப்பு வழுக்கை விழ காரணமாக அமைகிறது. ஆண்களுக்கு வழுக்கையை சரிய செய்யவதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்...
வழுக்கை ஏற்படுவதற்கான காரணங்கள்:
- வயது முதிர்வு
- ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ளாதது
-மன அழுத்தம் மற்றும் பதற்றம்
- ஹார்மோன் மாற்றங்கள்
-நாள்பட்ட நோய்கள்
- சுற்றுச்சூழல் காரணிகள்
- இதய நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம்
- புரோஸ்டேட் புற்றுநோய்
- நீரிழிவு நோய்
- உடல் பருமன்
- இரும்புச்சத்து குறைபாடு
- வைட்டமின் ஏ சத்தை அதிகப்படியாக உட்கொள்ளுதல் போன்றவை ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.
QR678 சிகிச்சை என்றால் என்ன?
வழுக்கைக்கான சிகிச்சை முறைகள் அது ஏற்படுவதற்கான காரணம் மற்றும் நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆண்களுக்கு வழுக்கை விழுவதை தடுக்க நிலையான சிகிச்சை இல்லை என்றாலும், QR678 போன்ற நவீன கால சிகிச்சைகள் வழுக்கையான இடத்தில் மீண்டும் முடி வளரவும், முடி உதிர்வை தடுக்கவும் உதவுகின்றன. QR678 சிகிச்சை முறை தலைமுடிக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், பெப்டைடுகள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
அவை நேரடியாக மயிர்க்கால்களுக்குள் செலுத்தப்படுகின்றன, மேலும் அவை மயிர்க்கால்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றன. இதனால் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை மீண்டும் உருவாக்க முடிகிறது. நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை அவகாசம் கொண்ட இந்த சிகிச்சை முறை ஆண், பெண் என இரு பாலினத்தவருக்கும் ஏற்படும் வழுக்கையை வலி இல்லாமல் சரி செய்கிறது.
வழுக்கையை சரி செய்யக்கூடிய பிற சிகிச்சை முறைகள்:
ஆண்களுக்கான வழுக்கை மற்றும் முடி வளர்ச்சி சிகிச்சையில் பயன்படுத்தக்கூடிய மினாக்ஸிடில் மற்றும் ஃபினாஸ்டரைடு போன்ற மருந்துகளை தனித்தனியாகவோ அல்லது கலவையாகவோ பயன்படுத்துவது.
PRP (platelet-rich plasma - பிளேட்லெட்ரிச் பிளாஸ்மா) என்பது, குறிப்பிட்ட நபரின் ரத்தத்தில் உள்ள ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்து, உச்சந்தலையில் செலுத்தப்படும் த்ரீ-ஸ்டெப் மருத்துவ சிகிச்சை முறையாகும். இந்த மருத்துவ சிகிச்சை முறை இயற்கையான முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது.
ஹேர் டிரான்ஸ்ப்ளான்டேஷன் என்பது தலையில் முடி வளர்ச்சி அதிகமுள்ள இடத்தில் இருந்து மயிர்கால்களை எடுத்து தலைமுடி குறைந்த முன் பகுதியில் நட்டு வைக்கும் முறையாகும். இந்த சிகிச்சையை எவ்வளவு முடி அளவு குறைவாக உள்ள நபருக்கும் செய்ய முடியும்.
வழுக்கைக்கான சிகிச்சையை மேற்கொள்ளும் முன்பு, தகுதியான தோல் மருத்துவர் அல்லது அழகுக்கலை நிபுணரிடம் இதுகுறித்து பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, முடியை கடுமையாக பாதிக்கும் ஹேர் ஸ்டைல்களை தவிர்ப்பது, புகைப்பிடித்தல், ஜங்க்ஃபுட் உட்கொள்வது போன்றவற்றில் மாற்றத்தைக் கொண்டு வருவது வழுக்கை சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கு கூடுதல் பலனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments