Ad Code

Responsive Advertisement

ZOOM செயலியை பயன்படுத்தி நூதன திருட்டு - மூவர் கைது

 

ஜூம் செயலி மூலம் காரை வாடகைக்கு எடுத்து திருட்டில் ஈடுபட்டு வந்த  மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆவடி மேட்டுப்பாளையம், நடுத்தெருவில் வசிப்பவர் கிருத்திகா (28) ஜூம் செயலி மூலமாக தனது காரை வாடகைக்கு விடுவதாக பதிவு செய்திருந்தார். இதில், புவனன் குப்தா என்ற பெயரில் வாடிக்கையாளராக இணைந்த அரவிந்த், கடந்த 8ம் தேதி ‘டொயோட்டா அர்பன் கிரஷர்’ என்ற காரை ஒரு நாள் வாடகைக்கு புக் செய்தார். பின்னர், 10ம் தேதி இரவு 9.15 மணிக்கு காருக்கான முன்பணம் மற்றும் ஓட்டுனர் உரிமம் அட்டையை கொடுத்து காரை எடுத்து சென்றுள்ளனர். அந்த ஓட்டுனர் உரிமத்தை ஆன்லைனில் சோதனை செய்தபோது, அது போலியானது என தெரிய வந்தது. இதுபற்றி கேட்க காரை வாடகை எடுத்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.


இதனை, தொடர்ந்து 2 நாட்கள் அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஆர்எஸ் கருவியை வைத்து எங்கு  செல்கிறது என கண்காணித்து வந்தார். ஆனால், 2 நாட்கள் கழித்து அந்த கருவியின் மூலம் எந்த ஒரு தொடர்பும் கிடைக்கவில்லை. பிறகுதான் ஜிபிஆர்எஸ் கருவி செயல் இயக்க செய்துள்ளனர் என தெரிந்தது.  எடுத்துச் சென்ற காரை 5 நாட்கள் ஆகியும் திரும்ப தராததால் மனுதாரர் கொடுத்த புகாரின் பேரில் ஆவடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதேபோன்று, கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதியும் ஆவடி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்பவர் தனது ‘ஹோண்டா டபிள்யூ.ஆர்-பி’ என்ற கார் இதே பாணியில்  காணவில்லை என ஆதே காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார்.


ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ஆவடி மாவட்ட துணை ஆணையாளர் மகேஷ் மேற்பார்வையில், உதவி ஆணையாளர் புருஷோத்தமன், அவர்களின் தலைமையில் குற்றப்பிரிவு ஆய்வாளர் அருணாச்சல ராஜா மற்றும் உதவி ஆய்வாளர் ராஜு, நாகராஜன் மற்றும் சரவணன், சசிக்குமார். சுப்பிரமணியன், விக்டர் ஜெய்சிங், அருண் ராஜேஷ், நிர்மல் குமார், பாபு பாக்கியராஜ், பாபு ஆகியோரை கொண்ட தனிப்படையினர் இந்த கார் மோசடி குறித்து விசாரித்தனர். அதில், இன்பார்மர் கொடுத்த தகவலின் மூலம் இந்த கார் திருட்டு  வழக்கில் ஈடுபட்டது சென்னை திருமங்கலம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த அரவிந்தன் (36), திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மஞ்சன்குளம் பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம், (30), திருநெல்வேலி நாங்குநேரி வடுக்கச்சி மதில் பகுதியை சேர்ந்த அருணாச்சல பாண்டி, (32) ஆகியோர் என்பது தெரிந்தது.


அவர்களை திருநெல்வேலி சமாதானபுரம் சந்திப்பில் வைத்து 19ம் தேதி சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மூவரும் ‘ஜூம் கார் செயலி’ மூலம் சென்னையில் பல இடங்களில் காரின் உரிமையாளர்களை ஏமாற்றி கார்களை திருடி வந்து திருநெல்வேலியில் விற்பனை செய்து வந்ததை  ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து ‘டொயோட்டா அர்பன் கோர்ஸ்’ மற்றும் ‘ஹோண்டா டபிள்யு.ஆர்-வி’ என்ற காரை பறிமுதல் செய்தனர்.  இவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தான், கொரட்டூர், புழல், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் திருடிய கார் குறித்த முழு தகவல்கள் தெரியவரும் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement