திருப்பதி-'திருமலையில், வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் திருப்பதியில் தங்க வேண்டும்' என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருமலையில் தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறியதாவது: கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் போது, நான்கு மாட வீதிகளில் வாகன சேவைகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தாண்டு, செப்., 27ம் தேதி முதல், அக்டோபர் 5ம் தேதி வரை, வருடாந்திர பிரம்மோற்சவம் நான்கு மாட வீதிகளில் கோலாகலமாக நடக்க உள்ளது. பிரம்மோற்சவத்தின் போது பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வரும் என்பதால், அதற்கேற்ப தங்கும் வசதி திருமலையில் இல்லாததால், பக்தர்கள் திருப்பதியில் தங்க வேண்டும். இதே போல, பிரம்மோற்சவ காலத்தில் சர்வதரிசனத்தை மட்டும் அமல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
வி.ஐ.பி., பிரேக்' தரிசனம், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் போன்றோருக்கான சிறப்பு தரிசனங்களை ரத்து செய்துள்ளோம். ஆகஸ்ட் மாதம் முழுதும் ஏழுமலையான் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 22.22 லட்சம். உண்டியல் காணிக்கை 140.34 கோடி ரூபாய். விற்பனையான பிரசாத லட்டுகளின் எண்ணிக்கை -1.05 கோடி. முடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை - 10.85 லட்சம். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments