இந்த ஆண்டு பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்ற 55 சதவீதம் மாணவர்கள் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப பாடப்பிரிவுகளை தேர்வு செய்துள்ளனர். கடந்த 10ம் தேதி தொடங்கிய பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது. பொதுப்பிரிவு முதற்கட்ட கலந்தாய்வில் 14,546 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர். அதில், 12,294 மாணவர்கள் தங்களுக்கான கல்லூரிகளில் விருப்ப பட்டியலை தேர்வு செய்து, அதில், 11,595 மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதில், 11,626 மாணவர்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்துள்ளனர். அதன்படி, 5,233 பேருக்கு கல்லூரியில் சேருவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 5,233 மாணவர்களில் சுமார் 55 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கணினி அறிவியல் படிக்க அதிகளவில் ஆர்வம் காட்டியுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 334 மாணவர்கள் தகுதிபெற்று அதில், 185 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். 2ம் கட்ட கலந்தாய்வில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளதால் 2ம் சுற்று கலந்தாய்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
0 Comments