உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலையால் கையை சுட்டுக் கொண்டவர்கள், தங்கள் பட்ஜெட்டை கட்டுக்குள் வைக்க பரிகாரம் தேடிய போது வரப் பிரசாதமாக வந்து நின்றவை எலெக்ட்ரிக் வாகனங்கள் தான். ‘‘முழுசா சார்ஜ் செய்ய பத்து ரூபாய் கூட ஆகாதாம். ஒரே ஒரு தடவை முதலீடு போட்டா போதும். அஞ்சு வருஷத்துல பெட்ரோலுக்கு செலவழிக்கிற காசை அப்படியே எடுத்துடலாம்” …. இதுதான் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கும் பெரும்பாலான மக்களின் மனக்கணக்கு.
இப்படி கூட்டிக்கழித்து பார்த்து, ஒரு வழியாக எலெக்ட்ரிக் பைக்கை வாங்கியும் விடுகிறார்கள். அதன்பிறகு பெட்ரோல் வாகனம் வைத்திருக்கிறவர்களை பார்க்கும் பார்வையே ஏளனமாகத்தான் தோன்றும். தப்பித்தவறி சிக்குபவர்களிடம் ‘நீங்க இன்னும் டெக்னாலஜிக்கு ஏற்ப முன்னேறவே இல்ல போலிருக்கே…’’ என்று அட்வைஸ் வேறு அள்ளித்தெளிப்பார்கள்.
ஒரே ஒரு முறை முதலீடு… இனி இருக்காது பெட்ரோல் தலையீடு… என்று எலெக்ட்ரிக் உலகில் மிதந்தவர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது, தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் 8 பேரை பலி கொண்ட தீ விபத்து
ஒரு முறை முதலீடு போதும் என்று நினைத்துக் கொண்டிருந்த பலர், தற்போது முதலுக்கே மோசம் போய்விடுமோ என்கிற ரீதியில், பீதியில் உறைந்திருக்கிறார்கள். இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல… எலெக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் சார்ஜிங் செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் 7 பைக்குகள் நாசமாகின. இது கடந்த ஜூலை மாதம் நடந்தது. கடந்த மார்ச் மாதம் வேலூரில், வீட்டில் எலெக்ட்ரிக் பைக்கை சார்ஜ் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில், தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே கருகி இறந்தனர். புத்தம் புதிதாக பைக் வாங்கிய பிறகு 3வது நாளில் நடந்த சோகம் இது.
இதுபோன்ற சம்பவங்கள், எரிபொருள் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற எலெக்ட்ரிக் வாகனம் தான் மாற்று என்ற ஒன்றிய அரசின் இலக்கிற்கும், பணத்தை மிச்சப்படுத்த எலெக்ட்ரிக் வாகனம் வாங்க வேண்டும் என்று மிதந்தவர்கள் கனவிலும் மண்ணை அள்ளிப்போட்டது போல ஆகிவிட்டது. எலெக்ட்ரிக் பைக்கை பார்த்தாலே, ஏதோ விமான நிலையம், ரயில் நிலையம் உட்பட பொது இடங்களில் கேட்பாரற்ற பார்சலை பார்த்து பயப்படுவதற்கு ஒப்பான ஒரு பயத்தை மக்களிடையே தோற்றுவித்து விட்டது என்பதை பெரும்பாலானோர் மறுப்பதில்லை. அடுத்தடுத்த எலெக்ட்ரிக் பைக் தீ விபத்துகளை பார்த்த பிறகு, ஒரு சில அடுக்குமாடி குடியிருப்புகளில், எலெக்ட்ரிக் பைக் வைக்கவே ஆட்சேபம் செய்வதாக பைக் வாங்க திட்டமிட்டிருந்த சிலர் தெரிவிக்கின்றனர்.
இந்த அளவுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், பைக்குகள் தீப்பிடித்து எரிவதற்கு தீர்வு காண ஒவ்வொரு தரப்பும் ஆய்வுகளில் மூழ்கிக் கொண்டிருக்க, இத்தகைய தீ விபத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. பேட்டரி செயல்பாடுகளை நிர்வகிக்கும் வாகன சாப்ட்வேரில் பிரச்னை காரணமாக தீ விபத்து ஏற்படலாம்.பேட்டரியை சார்ஜ் செய்யும்போது அதிக வெப்பம் ஏற்படுகிறது. இது வெளியேறுவதற்கான முறையான அமைப்புகள் இல்லாததும் விபத்துக்கு காரணமாக அமைகிறது. ஒரே நேரத்தில் பல வாகனங்கள் சார்ஜிங் செய்யும்போதும், அதி வேக சார்ஜிங் பயன்படுத்தும்போதும் இதுபோன்ற விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், இவற்றுக்கெல்லாம் மேலாக, தரம் குறைந்த பேட்டரிகள் பயன்படுத்துவது மிக முக்கிய மற்றும் பிரதான காரணமாக கருதப்படுகிறது. ஏனெனில், பேட்டரி வாகன உற்பத்தி செலவில் பெரும்பகுதியை பேட்டரிகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. எனவேதான், தரம் குறைந்த பேட்டரிகள்தான் இதற்கு காரணம் என்பது பலரின் ஆணித்தரமான வாதமாக உள்ளது.
இதை மெய்ப்பிக்கும் வகையில், சீனாவில் இருந்து தரம் குறைந்த பேட்டரிகள் இறக்குமதி செய்யப்படுவதாக ஒன்றிய அரசின் எலெக்ட்ரிக் வாகன திட்டத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறுகையில், ‘‘தரம் குறைந்த பொருட்கள் பல சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தரம் குறைந்த சோலார் பேனல்கள் சீனாவில் இருந்து எப்படி இறக்குமதி செய்யப்பட்டதோ, அதே போன்றுதான் வாகனங்களுக்கு தரமற்ற லித்தியம் அயன் பேட்டரிகளும் சீனாவில் இறக்குமதியாகின்றன. சில தயாரிப்பாளர்கள் உற்பத்தி செலவை குறைக்க இவ்வாறு செய்கின்றனர். கடந்த 2010ம் ஆண்டில் இருந்தே, தனது நாட்டில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிக்க சீனா மானியம் வழங்கி வருகிறது. சீனாவில் முன்பு குறைந்த தொலைவு இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
அவற்றின் வேகமும் அதிகபட்சம் 25 கி.மீ தான். தற்போது அதிக தொலைவுக்கு வாகனங்களை ஓட்டும் வகையில் அதிக திறன் கொண்ட பேட்டரிகளை தயாரிக்கின்றனர். புதிய தொழில்நுட்பத்துக்கு மாறி விட்டனர். இதனால், குறைந்த தூரம் இயங்கும் திறன் குறைந்த பேட்டரிகளுக்கான மானியம் சீனாவில் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், திறன் குறைந்த, தரம் குறைந்த பேட்டரிகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பல வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன’’ என்றனர். இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தீ வெடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்த அறிக்கையிலும், எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள பேட்டரிகளின் தரம் குறைவாக இருந்ததும், பேட்டரியை கையாண்ட தொழில்நுட்ப கோளாறும் முக்கிய காரணம் என்பதை சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தட்பவெப்ப சூழ்நிலை, பயன்பாடுகளுக்கு ஏற்ப பேட்டரிகள் இங்கு உற்பத்தி செய்யப்பட வேண்டும். தரம் குறைந்த சீன பேட்டரிகள் எலெக்ட்ரிக் வாகன விலையை குறைக்கலாம். ஆனால், உயிருக்கு உலை வைக்கின்றன என்பதை வாகன உற்பத்தியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கேற்ப ஒன்றிய அரசும் இந்தியாவில் தரமான மலிவான பேட்டரி உற்பத்தியை மேற்கொள்வதற்கான வழி முறைகளை வகுக்க வேண்டும் என்பது, எலெக்ட்ரிக் வாகனத்தை விரும்புவோரின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
*இந்த ஆண்டின் சில தீ விபத்துகள்
சமீபத்திய உதாரணங்களாக, கடந்த மே 27ம் தேதி, சென்னையில் உள்ள ஏதர் நிறுவன ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது. கடந்த மாத துவக்கத்தில், கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள கோமாக்கி எலக்ட்ரிக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டு, 9 வாகனங்கள் கருகின. ஸ்கூட்டரை சார்ஜிங் செய்யும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக பின்னர் தெரிய வந்தது. இதுபோல் கடந்த ஏப்ரல் மாதம், குஜராத்தில் ‘பியூர் இவி’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீயில் எரிந்து நாசமானது.
இது, கடந்த ஆண்டு செப்டம்பருக்கு பிறகு இந்த நிறுவன ஸ்கூட்டருக்கு நேர்ந்த 4வது தீ விபத்தாகும். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 40 ஜிதேந்திரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டிரக்கில் எடுத்துச் சென்றபோது, ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. கடந்த மார்ச் மாதம், புனேயில் ஓலா ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது. இந்த நிறுவன ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிவது முதல் முறையல்ல.
* பாதுகாப்பில் நம்பிக்கை இல்லை
எலெக்ட்ரிக் வாகனங்கள் பாதுகாப்பானதாக இருக்கிறது என்ற நம்பிக்கை பலரிடம் இல்லை என்பது ஒரு சர்வேயில் நிரூபணம் ஆகியுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு பற்றி கடந்த மாதம் ஒரு அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இதில் 292 மாவட்டங்களில் 11,000க்கும் மேற்பட்டோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் 32 சதவீதம் பேர், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பாதுகாப்பு மற்றும் திறனில் நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளனர். மேலும் 31 சதவீதம் பேர் எலெக்ட்ரிக் வாகனங்களை ஓட்டியதில்லை எனவும், 9 சதவீதம் பேர், எலெக்ட்ரிக் பைக் அல்லது ஸ்கூட்டர் வாங்கும் எண்ணமே இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். ஒரு சதவீதம் பேர் மட்டுமே, அடுத்த 6 மாதங்களுக்குள் எலெக்ட்ரிக் வாகனம் வாங்க விரும்புவதாக கூறியுள்ளனர்.
* ‘எல்எப்பி’ பேட்டரி
லித்தியம் பெரோபாஸ்பேட் எனப்படும் எல்எப்பி பேட்டரி எளிதில் தீப்பிடிக்காதது என கூறப்படுகிறது. லித்தியம் அயன் பேட்டரியை விட 4 மடங்கு கூடுதலாக உழைக்கக்கூடியது. இந்தியா போன்ற வெப்பநாடுகளில் பயன்படுத்துவது ஏற்றது. சார்ஜ் போடும்போது 30 சதவீதம் வெப்பத்தை தாங்கக்கூடியது என்றும், எனவே லித்தியம் அயன் பேட்டரிக்கு மாற்றாக இதை பயன்படுத்துவது சிறந்தது எனவும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
* புதிய விதிகளால் விலை 10% உயரும்
எலெக்ட்ரிக் வாகன பேட்டரிகளின் பாதுகாப்பு தொடர்பாக ஒன்றிய அரசால் பிறப்பிக்கப்பட்ட புதிய விதிகள் அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருவதற்கு வாகன உற்பத்தியாளர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனிடையே, இந்த புதிய விதிகள் காரணமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலை 10 சதவீதம் அதிகரிக்கலாம் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு லித்தியம் அயன் பேட்டரி சப்ளை செய்யும் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சாம்ராத் கோச்சார் கூறுகையில், ‘‘புதிய பாதுகாப்பு விதிகளால் பேட்டரிகளின் விலை 20 சதவீதம் வரை அதிகரிக்கும். அதேநேரத்தில் வாகனத்தின் மொத்த விலையில் 10 சதவீதம் உயரும். வாகன உற்பத்தி செலவில் ஏறக்குறைய 50 சதவீதம் பேட்டரியின் பங்களிப்பு உள்ளது. உதாரணமாக ஒரு லட்சம் விலையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், சுமார் ரூ.10,000 அதிகரிக்கும்’’ என்றார்.
*இலக்கு எட்டப்படுமா?
பெட்ரோல், டீசலை சார்ந்திருப்பதற்கு மாற்றுத் தீர்வு எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் என்கிறது ஒன்றிய அரசு. இது வாத ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தாலும், எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டுக்கான உள்கட்டமைப்புகள் முழுமையான இல்லை என்பதே உண்மை. அரசின் இலக்கு குறித்து கடந்த மாதம் குறிப்பிட்ட ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘வரும் 2030ம் ஆண்டு விற்பனை செய்யப்படும் வாகனங்களில் தனிநபர் பயன்படுத்தும் கார்களில் 30 சதவீதம், வணிக பயன்பாட்டு வாகனங்களில் 70 சதவீதம், டூவீலர் மற்றும் 3 சக்கர வாகனங்களில் 80 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என்பது ஒன்றிய அரசின் இலக்கு’’ என தெரிவித்தார்.
ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான உள்கட்டமைப்புகள் போதுமானதாக இல்லை என்பது வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. பெட்ரோல் தீர்ந்து விட்டால் வழியில் ஏதாவது ஒரு பங்க்கில் நிரப்பி விடலாம். ஆனால், எலெக்ட்ரிக் பைக் சார்ஜ் தீர்ந்து விட்டால், அதற்கான வசதி வழியில் கிடைத்தாலும், உடனே ஏற்றி விட முடியாது. அவ்வாறு சார்ஜிங் வசதிகள் இல்லாவிட்டால் யாரிடமாவது கெஞ்சிக் கேட்டுதான் சார்ஜ் போடவேண்டி வரும். இதெல்லாம் சாத்தியப்படும் வகையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.குறைந்த பட்சம் பேட்டரியை மாற்றிக்கொள்ளும் வசதியாவது அதிகம் வர வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
1 Comments
மூச்சுக்கு முன்னூறு முறை ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று சொல்கிறீர்களே, நீங்கள் என்ன விடியாத திராவிடியா கூட்டமா???
ReplyDelete