நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கான வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.96 குறைக்கப்பட்டு, சென்னையில் ரூ.2,045, சேலத்தில் ரூ.1,998.50 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை பொறுத்தவரை, நடப்பாண்டில் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி ரூ.50, மே 7ம் தேதி ரூ.50, மே 19ம் தேதி ரூ.3, ஜூலை 6ம் தேதி ரூ.50 அதிகரிக்கப்பட்டது. இந்த விலையேற்றத்தால் வரலாறு காணாத புதிய உச்சமாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1,068.50, டெல்லியில் ரூ.1,053, கொல்கத்தாவில் ரூ.1,079, மும்பையில் ரூ.1,052.50, சேலத்தில் ரூ.1,086.50 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான புதிய விலையை நேற்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் சென்னையில் ரூ.1,068.50, சேலத்தில் ரூ.1,086.50 ஆக நீடிக்கிறது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை பொறுத்தவரை, இம் மாதம் ரூ.96 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ரூ.2,141ல் இருந்து ரூ.96 குறைந்து ரூ.2,045 ஆகவும், சேலத்தில் ரூ.2,094ல் இருந்து ரூ.95.50 குறைந்து ரூ.1,998.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பல மடங்கு உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியுள்ளதால், அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் குறைய தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் மட்டும் வர்த்தக சிலிண்டர் விலை 5வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.
0 Comments