Ad Code

Responsive Advertisement

தந்தை கண் எதிரே 2 பள்ளி மாணவிகள் பலி

 




ஆம்பூரில் நேற்று காலை தேசிய நெடுஞ்சாலையில் குடிபோதையில் வந்த டிரைவரால் தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி மோதி சகோதரிகளான 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் ஊராட்சி மெயின் ரோட்டை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (47). கதவு, ஜன்னல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி அனுராதா (40). இவர்களது மகள்கள் ஜெயஸ்ரீ (16), வர்ஷாஸ்ரீ(11). இருவரும் ஆம்பூர் அடுத்த புதுகோவிந்தாபுரம் தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்1 மற்றும் 6ம் வகுப்பு படித்து வந்தனர்.


நேற்று காலை தட்சிணாமூர்த்தி மகள்கள் இருவரையும் பள்ளிக்கு பைக்கில் அழைத்து சென்றார். ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓஏஆர் சிக்னல் அருகே வந்தபோது அவ்வழியாக தறிகெட்டு அதிவேகமாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட 40 அடி நீள கன்டெய்னர்  லாரி, பைக் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். ஜெயஸ்ரீ, வர்ஷாஸ்ரீ ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தட்சிணாமூர்த்தி கை, இடும்பு எலும்புகள் முறிந்த நிலையில் கிடந்தார். அந்த கன்டெய்னர் லாரி  5 இரும்பு தடுப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு சர்வீஸ் சாலைக்குள் புகுந்தது. லாரியில் இருந்த கன்டெய்னர் சரிந்து மின்கம்பத்தில் மோதி நின்றது.


தகவலறிந்து வந்த போலீசார் தட்சிணாமூர்த்தியை மீட்டு ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கலெக்டர் அமர் குஷ்வாஹா, எம்எல்ஏ வில்வநாதன், ஆம்பூர் நகராட்சி தலைவர் ஏஜாஸ் அஹ்மத் உள்ளிட்டோர், தட்சிணாமூர்த்தியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். கன்டெய்னர் லாரி டிரைவரான சென்னை அம்பத்தூர் அடுத்த மேனாம்பேடு, பாரதி நகரை சேர்ந்த ஜார்ஜ் ஜெயசீலனை (29) அப்பகுதியினர் மடக்கி பிடித்தனர். போதையில் தள்ளாடியபடி இருந்த அவரை ஆம்பூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் லாரி பெங்களூரில் இருந்து சென்னைக்கு சென்றதும், அதில் கர்நாடக மாநில மதுபாட்டில்களை பதுக்கி எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைதுறை மீட்பு படையினர் இரண்டு மணி நேரம் போராடி இரு கிரேன்கள் உதவியால் அந்த லாரி மற்றும் கன்டெய்னரை அப்புறப்படுத்தினர். ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குபதிந்து டிரைவர் ஜார்ஜ் ஜெயசீலனை கைது செய்தனர்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement