நாட்டில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை மத்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிட்டு வருகிறது. பல்வேறு மதிப்புகளில் இவை அச்சடித்து வெளியிடப்படுகின்றன.
இவ்வாறு மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூ.10 நாணயங்களை தனிநபர் மற்றும் கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட சிலர் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், இவ்வாறு வாங்க மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடும் ரூ.10 நாணயங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லத் தக்கவையாகும். எனவே, பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் ரூ.10 நாணயங்கள் குறித்து சந்தேகப்படத் தேவையில்லை.
மேலும், இவ்வாறு வாங்க மறுக்கும் தனிநபர் மற்றும் கடை உரிமையாளர்கள் மீது ரிசர்வ் வங்கியால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள முடியாது.
மாறாக, அவர்களுக்கு இதுதொடர்பாக விழிப்புணர்வை மட்டுமே ஏற்படுத்த முடியும்.
அதே சமயம், வங்கிகள் ரூ.10நாணயங்களை வாங்க மறுத்தால், குறிப்பிட்ட வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க முடியும். அதேபோல், பேருந்துகளில் நடத்துநர்கள் ரூ.10 நாணயங்களை வாங்க மறுத்தால், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். அதிகாரிகள் இதுதொடர்பாக நடத்துநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பொதுமக்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. அவர்களுக்கு விழிப்புணர்வை மட்டும்தான் ஏற்படுத்த முடியும்.
அதேபோல்தான் ரூ.10 நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது ரிசர்வ் வங்கியால் நடவடிக்கை முடியாது. அதேசமயம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி அவ்வப்போது சுற்றறிக்கை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்றனர்.

0 Comments