Ad Code

Responsive Advertisement

அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை - முதலமைச்சர் உத்தரவு

 




ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திங்கள் கிழமை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு வில்லிவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் ரூ.50,000 உதவி அளிக்கப்பட்டுள்ளது. முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் குழந்தையின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்யவும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார். ஆவடி வீராபுரம் ஸ்ரீவாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினர். இவர்களுக்கு 2012ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள், மகன் என 2 குழந்தைகள் உள்ளனர்.


இவர்களின் மூத்த மகள் டானியா. ஒன்பது வயதாகிறது. டானியா வீராபுரம் அரசினர் பள்ளியில் நான்காம் வகுப்பு பயிற்று வருகிறார். இவருக்கு ஒரு பக்க கன்னம் முழுவதும் அரியவகை முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டது. இதற்காக கடந்த 6 ஆண்டுகளாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் எந்தவித முன்னேற்றம் இல்லாத நிலையில் இதனால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் அவதிப்படுவது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதனை பார்த்து திருவள்ளூர் மாவட்ட மருத்துவ துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்தகால மருத்துவ தகவல்கள் குறித்து கேட்டு அறிந்தனர்.


இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவை சந்திக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் நேரில் வருகை தந்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் கலந்துரையாடினார். மேலும் சிறுமி குறித்தும் குடும்பச்சூழல் குறித்தும் பெற்றோர்களிடம் விசாரித்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாகவும் உயர்தர சிகிச்சை அளிக்க அரசு முழு உதவி செய்யும் எனவும் உறுதியளித்தார். இரண்டு நாள் தொடர் ஆய்வுக்கு பின்னர் அறுவை சிகிச்சைக்கு தேதி முடிவு செய்யப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில், முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திங்கள் கிழமை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement