ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட மாணவ, மாணவிகள் தினமும் யோகாசனம் செய்யவேண்டும் என புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கூறினார்.
காரைக்கால் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா புதன்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்ழாவில் புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். விழாவில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் பேசும்போது கூறியதாவது:
மாணவ பருவத்தை அனைவரும் மகிழ்ச்சியாக கடக்க முயற்சிக்க வேண்டும். ஏட்டுப் படிப்பும், மதிப்பெண்களும் மட்டுமே முக்கியம் என பெற்றோர்கள் பலரின் மனநிலைஇருக்கிறது. ஆடல், பாடல், விளையாட்டு, யோகா உள்ளிட்ட பிற திறன்களையும் வளர்த்துக்கொள்வதன் மூலம்தான் கல்வி பயிலும் மாணவர்கள் சிறந்த நிலையை எட்ட முடியும்என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மதிப்பெண் பெறுவது மட்டுமே கல்வி என்ற கோணத்தில் குழந்தைகளை பெற்றோர்கள் பார்க்க நேரிட்டால், அவர்களுக்கு மனச்சோர்வு போன்ற பாதிப்பு வரக்கூடும். அதுபோன்ற நிலை ஏற்படுவதைத் தவிர்த்து,பிள்ளைகள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சூழலை பெற்றோர்கள் ஏற்படுத்தித்தர வேண்டும். புதுச்சேரி அரசின் மொத்த பட்ஜெட் தொகையில் கல்விக்காக மட்டும் 8 சதவீதத்தை முதல்வர் வி.நாராயணசாமி ஒதுக்கீடு செய்துள்ளார்.
0 Comments