Ad Code

Responsive Advertisement

மதமாற்ற புகார்: அரசுப்பள்ளிஆசிரியை பணியிடை நீக்கம் செய்ய ஆட்சியர் உத்தரவு

 




நாகர்கோவிலை அடுத்த இரணியல், கண்ணாட்டு விளை பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பணிபுரியும் தையல் ஆசிரியை ஒருவர், தன்னிடம் பயிலும் மாணவிகள் சிலரிடம் மதமாற்றம் செய்வதாக புகார் எழுந்தது. இதுபற்றி மாணவிகள், தங்களின் பெற்றோரிடம் கூறினர்.


இதையடுத்து நேற்று மாலை அந்த பள்ளிக்கு இந்து முன்னணி கோட்ட செயலாளர் மிசா சோமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் சென்றனர்.


அவர்கள் பள்ளி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். புகார் கூறப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து இரணியல் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.


அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.


மேலும் புகார் கூறிய மாணவியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகள், தையல் ஆசிரியை தங்களிடம் குறிப்பிட்ட மதத்தின் அடையாளத்தை தைக்க சொல்வதாகவும், பிற மதங்கள் பற்றி இழிவாக பேசியதாகவும் தெரிவித்தனர்.


இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மதமாற்ற புகார் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


இந்நிலையில் இன்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தியிடம் கேட்டபோது, கண்ணாட்டு விளை அரசு பள்ளியில் நடந்த விவகாரம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரியை விசாரிக்க அறிவுறுத்தி உள்ளோம். அவர் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தபின்பு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவை தொடர்ந்து தற்போது இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.


தஞ்சாவூரில் உள்ள ஒரு பள்ளி மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது போன்ற புகார் எழுந்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்திற்காக போராட்டம் நடத்தியது. இப்போது குமரி மாவட்டத்தில் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிலையில் கண்ணாட்டு விளை அரசு பள்ளியில் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக தையல் ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement