Ad Code

Responsive Advertisement

இ-சேவை மையங்களில் கூடுதலாக 40 புதிய சேவைகள்

 





தமிழகத்தில் இ-சேவை மையங்களில் கூடுதலாக 40 புதிய சேவைகள் வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, மின்னணு சேவைகளை அரசு இ-சேவை மையங்கள் மற்றும் பொதுமக்களுக்கான பொது இணையதளம் மூலமாக வழங்கி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் செயல்படும் 580 உட்பட பல்வேறு முகமைகளின் கீழ் 10,818 இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.


அரசு இ-சேவை மையங்களில், வருவாய் மற்றும் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவை இணையதளம் வாயிலாக வழங்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் விவசாய வருமான சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், இயற்கை இடர்பாடுகளால் இழந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், அடகு வணிக உரிமம், கடன் கொடுப்போர் உரிமம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வகுப்பு சான்றிதழ் என்பது உள்பட 134 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் பல சேவைகளை இணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


இதுகுறித்து தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் டிஜிட்டல் முறையில் பொதுமக்களுக்கு உடனுக்குடன் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக அரசு சார்பில் இ-சேவை மையங்களில் ஆதார் வாயிலாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் நில உரிமை விவரங்களான பட்டா, புலப்படம், சிட்டா, நகர நில அளவை பதிவேடு ஆகியவற்றை பார்வையிடுவது, அ-பதிவேடு விவரங்கள், நில உரிமை விவரங்களை சரிபார்ப்பு, அரசு புறம்போக்கு நில விவரங்களை பார்வையிடுதல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக நிலங்களுக்கு வில்லங்கச்சான்றிதழ் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது.


மொத்தம் இ-சேவை மையங்கள் மூலம் 134 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது கூடுதலாக 42 புதிய சேவைகளை வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதாவது, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, பள்ளி கல்வி துறை போன்ற துறைகளை இ-சேவை மையத்துடன் இணைக்கும் பணிக்காக ஆரம்பக்கட்ட பணிகள் முடிந்துள்ளது. விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement