பள்ளி செல்லும் மாணவர்கள் வீடு திரும்பியவுடன் பெற்றோரிடம் உடனேயே சொல்வது, 'டைரியை மறந்து வகுப்பிலேயே வைத்துவிட்டேன்’ என்பதுதான். அதன்மூலம், வீட்டுப் பாடத்திலிருந்து தப்பித்துவிடுவார்கள். பள்ளிக்குத் தாமதமாகச் செல்வது, பள்ளிக்குச் செல்லாமலேயே இருப்பது என பெற்றோருக்குத் தெரியாமலேயே மாணவர்கள் வெளியே எங்காவது சென்றுவிடுவர்.
இனி வீட்டுப்பாடத்திலிருந்து தப்பிக்கவோ, பள்ளிக்குச் செல்லாமலோ இருக்க மாணவர்கள் எந்தவொரு காரணமும் சொல்ல முடியாது. பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கிடையே இணைப்புப் பாலமாக விளங்குகிறது 'கென்சில்' செயலி. அதென்ன 'கென்சில்'? இந்தச் செயலியை உருவாக்கியவரும் 'கென்சில்' நிறுவனத்தின் நிறுவனருமான நரேந்திரன் பாரிவள்ளலிடம் கேட்டோம்.
"கென்சில் என்பது 'மெட்டா லெவல் நேமிங்'. ஒரு விஷயத்தை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்வது. உதாரணம் 'ஜோமேட்டோ'. உணவுப்பொருளான 'டொமேட்டோ' என்பதிலிருந்து 'ஜோமேட்டோ' உருவானது. அதேபோல, உலகம் முழுவதும் ஒரு விஷயத்தைல் கடத்துவதற்கு அதிகமானோர் பயன்படுத்துவது பென்சில். பள்ளி தொடர்பாக பெயர் வைக்க வேண்டும் என்பதால் பென்சிலை 'கென்சில்' என மாற்றி இந்தப் பெயரை வைத்தோம்," என பெயர்க்காரணத்தை விளக்கினார் நரேந்திரன்.
கென்சில் செயலியில் பெற்றோர்களுக்கு என்னென்ன வசதிகள் உண்டு?
மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வீட்டுப் பாடங்களை 'கென்சில்' செயலியில் அறிந்துகொள்ளலாம். மாணவர்களின் வருகை, மாணவர்கள் தாமதமாக வருவது உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ளலாம். தேர்வுகளின் முடிவுகள், முந்தைய தேர்வு முடிவுகளுடன் ஒப்பிடப்பட்டு பெற்றோர்களுக்கு அனுப்பப்படும். மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டு தேர்வு முடிவுகளை இந்தச் செயலி தருவதில்லை. பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்கான தேதி, அல்லது செயல் திட்டங்கள் சம்பந்தமாக பள்ளிக்கு ஏதேனும் பொருட்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் அதற்கான நினைவூட்டல் வசதிகள் இந்தச் செயலியில் உண்டு. மழைக்காலங்களில் விடுமுறை என்றால் அதுகுறித்த அப்டேட்டும் உடனே கிடைக்கும். பள்ளி நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் உடனுக்குடன் இந்தச் செயலியில் ஏற்றப்பட்டு விடும்.
இந்தச் செயலி மூலம், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பயணிக்கும் பள்ளி வாகனத்தை டிராக் செய்யலாம். இதன் மூலம் வாகனம் எந்த இடத்திற்கு வருகிறது என்பதை அறிந்துகொண்டு மாலையில் பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம்.
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பெற்றோர்கள் 'கென்சில்' செயலியில் அப்டேட்டுகளை அறியலாம். ஸ்மார்ட்போன் இல்லையா? கவலை வேண்டாம். எல்லா அப்டேட்டுகளையும் இந்நிறுவனத்தினர் பெற்றோர்களின் மொபைலுக்கு குறுந்தகவலாக அனுப்பி விடுவார்கள்.
பள்ளி நிர்வாகத்திற்கு இந்தச் செயலி எப்படிப் பயன்படுகிறது?
பள்ளி வாகனங்களில் சிசிடிவி பொருத்தியிருக்கும் பட்சத்தில் அதனை பள்ளி நிர்வாகம் நேரலையாகப் பார்க்கலாம். அதன் மூலம், வாகனத்தில் ஏதேனும் பிரச்சினை அல்லது மாணவர்களுக்கு ஆபத்து நேரிடும்போது உடனடியாக எதிர்வினையாற்றலாம். பள்ளிக் கட்டணத்தை பெற்றோர்கள் இந்தச் செயலி மூலமாகவே செலுத்துவதன் மூலம் அதனை பள்ளி நிர்வாகம் நிர்வகிப்பது எளிதாகிறது. ஆசிரியர்களின் வருகையைக் கணக்கிடுவது, அவர்களின் வருமானம் உள்ளிட்டவற்றையும் நிர்வகிக்கலாம்.
இந்தச் செயலியை கண்டுபிடித்தது எப்படி?
இந்தச் செயலியை என் நண்பர் ஸ்ரீநாத்துடன் இணைந்து உருவாக்கினேன். நாங்கள் இருவரும் மென்பொறியியல் படிப்பை முடித்தவர்கள்.
ஸ்ரீநாத் மற்றும் நரேந்திரன். (இடமிருந்து வலம்)
"கல்லூரியில் படிக்கும் போதே அதிகமான நபர்களுக்கு 'Bulk SMS' அனுப்பும் தொழில் செய்துகொண்டிருந்தோம். அப்போது எங்களுக்கு அதிக அளவில் பள்ளிகளில் இருந்துதான் இந்த சேவை வேண்டும் எனக் கேட்டனர். பெற்றோர்களுக்கு வீட்டுப் பாடங்களை அனுப்புவது உள்ளிட்டவற்றுக்கு இந்தச் சேவையை பள்ளிகள் அதிகமாகப் பயன்படுத்தின. ஆனால் படித்துக்கொண்டிருந்த நேரத்தில் இதனைச் செயல்படுத்த முடியாமல் போனது," என்கிறார் நரேந்திரன்.
படித்துவிட்டு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்த நரேந்திரன், அந்த வேலையில் ஈடுபாடு இல்லாமல், 'பேப்பர் மேன்' என்கிற செயலியை நிர்வகிக்கும் மற்றொரு நிறுவனத்தில் இணைந்தார். மக்களையும் பழைய பொருட்கள் வாங்குபவர்களையும் இணைக்கும் செயலி இது. இந்தச் செயலியை உருவாக்கியவரும் நரேந்திரன்தான்.
2017-ல் 'கென்சில்' செயலியை உருவாக்குவதற்கான ஆய்வுகளை ஆரம்பித்து, 2018 ஏப்.14 அன்று செயலியைத் தொடங்கினர். பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் பலரிடமும் கலந்தாலோசித்து இந்தச் செயலியை பல்வேறு மாற்றங்களுடன் உருவாக்கியுள்ளனர். தொடர்ந்து இந்தச் செயலியை தேவைக்கேற்ப அப்டேட் செய்தும் வருகின்றனர்.
"நகரங்களில் இருக்கும் பள்ளிகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்தச் செயலியை உருவாக்கினால் சரியாக இருக்காது என நினைத்தோம். கிராமப்புறப் பள்ளிகளின் சவால்களையும் தீர்க்க வேண்டும் என எண்ணினோம். குக்கிராமம் ஒன்றில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் கூறிய கருத்து மகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை செயலியில் பதிவேற்றம் செய்திருந்தோம். புகைப்படங்களைப் பார்ப்பதற்காகவே ஸ்மார்ட்போன் வாங்கியதாக பெற்றோர்கள் பலர் தெரிவித்தனர்," எனக் கூறுகிறார் நரேந்திரன்.
பள்ளி நிர்வாகம் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு நிறுவனத்திடம் பல மென்பொருட்களை வாங்கிக்கொள்ளும் சமயத்தில், அனைத்துத் தேவைகளும் ஒரே செயலியில் இருப்பது பண மிச்சத்தையும், நேர மிச்சத்தையும் கொடுக்கிறது. 'கென்சில்' செயலியை பள்ளிகள்தான் வாங்க வேண்டும். ஆண்டுதோறும், இந்தச் செயலியைஒ பயன்படுத்துவதற்கு நிறுவனத்திடம் புதுப்பிக்க வேண்டும்.
ஆரம்பிக்கும்போது 30 தனியார் பள்ளிகள் மட்டுமே இந்தச் செயலியைப் பயன்படுத்தின. இப்போது 100 பள்ளிகளை எட்டியிருக்கிறது. இந்த ஆண்டு இதுவரை ரூ.90 லட்சம் வருமானத்தை ஈட்டியுள்ள 'கென்சில்' நிறுவனம், 2018-ல் கிட்டத்தட்ட ரூ.30 லட்சம் வருமானம் ஈட்டியது. சிறந்த இளம் தொழில்முனைவோர்களாகவும் நரேந்திரன் பாரிவள்ளல் - ஸ்ரீநாத் திகழ்கின்றனர்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பள்ளிகளில் தங்களது தொழிலை வெற்றிகரமாக நடத்தி வரும் இந்நிறுவனத்தினர், அரசுப் பள்ளிகளிலும் இந்தச் செயலியை செயல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.
0 Comments