தமிழகத்தில் பள்ளி கல்வி துறையின் வளர்ச்சி மற்றும் பொது தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக, சி.இ.ஒ.,க்களான முதன்மை கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம், வரும் 1ம் தேதி சென்னையில் நடக்கிறது.
தமிழகத்தில், பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சி பணிகள், திட்டங்கள் ஆகியவை குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக தி.மு.க., ஆட்சி வந்தபின், மாதம் தோறும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, சென்னையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இதன்படி, பள்ளிகள் திறப்பு; ஆன்லைன் வழி பாடங்கள்; 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க, வரும் 1ம் தேதி சென்னையில் சி.இ.ஓ.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது.
இதற்கான சுற்றறிக்கை, பள்ளி கல்வி கமிஷனர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர் வழியே, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பொது தேர்வுக்கான ஏற்பாடுகள், மாணவர் சேர்க்கை விபரம், ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை, அரசு பள்ளிகளின் ஆசிரியர் எண்ணிக்கை, பள்ளி கட்டட ஆய்வு விபரம், நர்சரி, பிரைமரி பள்ளிகளின் அங்கீகார நிலை குறித்த விபரங்களுடன் வருமாறு, சி.இ.ஓ.,க்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
0 Comments