அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான முதல் நிலை தேர்வுக்கு, இலவசமாக பயிற்சி பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசின் அகில இந்திய குடிமை பணித்தேர்வு பயிற்சி மையம், சென்னை மற்றும் அண்ணா நுாற்றாண்டு குடிமை பணித்தேர்வு பயிற்சி நிலையங்கள், கோவை, மதுரை பயிற்சி மையங்கள் ஆகியவற்றில், மத்திய தேர்வாணையம், அடுத்த ஆண்டு ஜூன், 22ல் நடத்த உள்ள குடிமைப் பணி தேர்வுக்கு, இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சென்னையில் உள்ள, அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில், 225 முழு நேரத் தேர்வர்கள், 100 பகுதி நேரத் தேர்வர்கள்; மற்ற பயிற்சி மையங்களில், தலா, 100 முழு நேரத் தேர்வர்கள் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர்.விருப்பம் உள்ள தமிழக மாணவர்கள், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தின் www.civilservicecoaching.com என்ற இணையதளம் வழியாக, இன்று முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே இப்பயிற்சி மையங்களில் முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். தகுதி உடைய நபர்கள், ஜனவரி 23ல் நடக்கும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், பயிற்சிக்கு அழைக்கப்படுவர். பிப்ரவரி முதல் வாரத்தில், பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும் என தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
0 Comments