கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 110 கோடி டோஸ் வரை போட்டுள்ள நிலையில், இன்னும் பலர் முதல் டோஸ் தடுப்பூசி கூட போடாமல் உள்ளனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மத்தியப் பிரதேச உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது. இந்த நடைமுறை டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு அமலுக்கு வருகிறது. ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவருமே தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும். அனைத்து பயனாளிகளிடமும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இருப்பதை உறுதிசெய்ய வேண்டியது ரேஷன் கடை ஊழியர்களின் பொறுப்பு.தடுப்பூசி போடாதவர்களின் பெயர்களை ஒவ்வொரு வாரமும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிக்க வேண்டும்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments